அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 40 ஏக்கர் நிலம்: தனி மனிதர் வழங்கினார்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில், எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான 40 ஏக்கர் நிலத்தை ஒரு தம்பதியர் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் கே.வி. சுப்பாராவ் (வயது 74). இவரது மனைவி பிரமிளா ராணி. சுப்பாராவின் தந்தை கிருஷ்ணையா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1974ம் ஆண்டு மரணமடைந்தார். தம்மைப்போல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்.

தற்போது கும்மிடிப்பூண்டி அருகே சூரபூண்டியில் 40 ஏக்கர் நிலத்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பெயரில் பத்திரம் முடித்து கொடுத்துள்ளார் சுப்பாராவ்.

"என்னுடைய தந்தை மரணமடைந்தபோது, புற்றுநோய்க்கு போதிய மருத்துவ வசதி இல்லை. இப்போது அந்நோய் பரவலாக காணப்படுகிறது. சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் அநேகர் திண்டாடுகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்படுவோருக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மனிதநேய அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அறிந்தோம். ஆகவே, அந்த மருத்துவமனைக்கு நிலத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்தோம்," என்று சுப்பாராவ் கூறியுள்ளார்.

புதன்கிழமையன்று கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலத்தில் நடந்த பத்திர பதிவின்போது, அடையாறு மருத்துவமனையில் சார்பில் டாக்டர் ஏ.வி. லட்சுமணன் கலந்து கொண்டார்.

வசதி இருந்தாலும் தானம் செய்ய மனம் வேண்டுமல்லவா! நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம்!

More News >>