புத்தாண்டு அன்று பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவச கல்வி: பெங்களூரு மேயர் அதிரடி அறிவிப்பு
பெங்களூரு: பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், புத்தாண்டு அன்று பெங்களூரு அரசு மருத்துவமனையில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு கல்லூரி வரையிலான முழு கல்வி செலவையும் அரசு ஏற்றுக் கொள்ளும் என பெங்களூரு மேயர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் இன்னமும் பெண் சிசுக் கொலை இருக்கிறது. பெண் குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலான விஷயம் என்று நினைக்கும் பல தாய்மார்களே பெண் குழந்தைகளை கொன்று விடுகின்றனர். அல்லது, ஆதரவற்றோர் இல்லங்களில் பச்சிளம் குழந்தையிலேயே விட்டுவிடுகின்றனர்.
இந்த சூழ்நிலையை மாற்றி, பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் வகையிலும் பெங்களூரு மேயர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 2018ம் ஆண்டின் முதல் நாள் அன்று பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு கல்லூரி படிக்கும் வரை இலவச கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.மேலும், மாநகராட்சி கண்காணிப்பாளர் மற்றும் அந்த குழந்தை பெயரில் கூட்டாக வங்கி கணக்கு தொடங்கி அதில், 5 லட்சம் ரூபாய் போட்டு வைத்து, அந்த குழந்தையின் கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, பெங்களூரு மேயர் சம்பத் ராஜ் கூறுகையில், “ வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், பெண் குழந்தையை வளர்ப்பதை சிரமமாக நினைக்கலாம். அந்த எண்ணத்தை மாற்றவே இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. ஜனவரி 1ம் தேதி சுகப்பிரசவத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும்” என கூறினார்.