பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீது செருப்பு வீச்சு: ஒருவர் கைது
By SAM ASIR
பீஹார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் மீது காலணி வீசப்பட்டது. அது தொடர்பாக பாட்னா காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பீஹார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் சில வாரங்களாக தம் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் பல்வேறு அணியினரை சந்தித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று கட்சியின் மகளிர் அணியினர் நடத்திய கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதற்கு முன்பு பாட்னாவில் மஹா தலித் என்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
வியாழன் அன்று மாநில தலைநகரான பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் இளைஞர் அணி கூட்டம் பாபு சபாகர் என்ற அரங்கத்தில் நடந்தது. தேர்தல் திட்ட வகுப்பாளராக இருந்து தற்போது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்திருக்கும் பிரசாந்த் கிஷோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
முதல் அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த ஒருவர் நிதிஷ் குமார் மீது செருப்பு ஒன்றை வீசினார். உடனே கட்சியின் இளைஞர் அணியினர் அவரை அடித்து உதைத்தனர். காவல்துறையினர் அந்த நபரை தொண்டர்களிடமிருந்து விடுவித்தனர். விசாரணையில் முதல் அமைச்சர் மீது காலணி வீசியவர் பெயர் சந்தன் குமார் என்றும் ஔரங்கபாத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
"மாநிலத்தில் வேலைக்கு இடஒதுக்கீட்டு நடைமுறை இருப்பதால், உயர் சமுதாயத்தை சேர்ந்த எனக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த கோபத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக முதல்வர் மீது செருப்பை வீசினேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்வதை தடை செய்து உச்சநீதிமன்றம் மார்ச் 20ம் தேதி தீர்ப்பளித்தது. ஆகவே, அது குறித்த சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர் சமுதாயத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த மாதம் பீஹார் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் சமுதாயத்தினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.