திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு: சுற்றுச்சுவர், கோபுரம் மீது விமானம் மோதியது
ஏர் இந்தியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது அங்குள்ள சுற்றுச்சுவர் மற்றும் வான் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசி இடித்தபடி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று மும்பை வழியாக துபாய் செல்வதற்காக இன்று காலை புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 130 பயணிகள் இருந்தனர்.
விமானம் மிக குறைந்த உயரத்தில் பறக்கத் தொடங்கியதால் விமான நிலைய சுற்றுச்சுவர் மீது விமானத்தில் சக்கரங்கள் மோதின. தொடர்ந்து, அருகே இருந்த வான் கட்டுப்பாடு கோபுரம் மீதும் உரசி விமானம் விபத்தை சந்தித்தது.
இருப்பினும், விமானம் தரையிறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், விமானம் விபத்தை ஏற்படுத்திவிட்டு பறந்து சென்றது. மும்பையிலாவது விமானம் தரையிறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், விமானம் பத்திரமாக பயணிகளுடன் துபாய்க்கு சென்றடைந்தது.
இந்த விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விபத்தை தாண்டி ஏர் இந்தியா விமானியின் சாதூர்ய செயலால் விமானத்தில் பயணித்த 130 பேரையும் பத்திரமாக தரையிரக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த எதிர்பாராத விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.