நிர்மலாதேவி உயிரை நக்கீரன் கோபால் காப்பாற்றியுள்ளார் - முத்தரசன்

சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மதித்திருந்தால் முதலில் ஆளுநரைதான் கைது செய்திருக்க வேண்டும் என்றும், நிர்மலாதேவி உயிரை நக்கீரன் கோபால் காப்பாற்றியுள்ளார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், விடுதலை நாளிதழ் சார்பில், பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் பாராட்டும் என்ற தலைப்பில், கருத்தரங்கு நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இந்து என்.ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலத்தை நக்கீரன் இதழ் வெளியிட்டது. அது தான் பிரச்சினைக்கு காரணம். நிர்மலாதேவி ஆடியோ வெளியானதும் அவசரம் அவசரமாக ஆளுநர் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது ஏன்?"

"நிர்மலாதேவி உயிரை நக்கீரன் கோபால் காப்பாற்றியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் வாதிகள் மாட்டுவார்கள் எனக் கூறும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பொய் ராதாகிருஷ்ணன் என தனது பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும்" என முத்தரசன் விமர்சித்தார்.

"நக்கீரன் கோபாலை விடுவித்த நீதிபதிக்கு பாராட்டு. அடுத்தது திமுக ஆட்சி தான். அப்போது இந்த ஆளுநர் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர் மீது வழக்கு போடப்படும். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சர்ச்சைக்குரிய நபராக மாறி வருகிறார்" என அவர் கூறியுள்ளார்.

More News >>