ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்ட காரணம் இதுதான்: ஸ்டாலின்

முதல்வரும், முன்னாள் முதல்வரும் இருவரும் அடிக்கடி பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதற்குக் காரணம், அதிமுகவின் ஆட்சி, விடாப்பிடியாகத் தொடர வேண்டும் என்பதுதான் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அதிகாரத்தில் இருப்பதால், காவல்துறையின் ஒத்தாசையோடும், மத்திய பாஜகவின் அனுசரணை இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தோடும், ஒரு வாக்குக்கு ஆறாயிரம் ரூபாய் என ஜனநாயகத்தை பட்டப்பகலிலும், நள்ளிரவிலும் விலைபேசியும், ஹவாலா டோக்கன் சிஸ்டத்தாரிடம் இடைத்தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக, "சாத்தான் வேதம் ஓதுகிறது" என்பதற்கொப்ப, திடீர் ஞானோதயம் வந்ததைப் போல வேதாந்தம் என நினைத்து உண்மைக்கு மாறானதை ஓதுகிறது.

இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களே இந்த மறைமுகக் கூட்டணி குறித்து என்ன காரணத்தினாலோ விமர்சனங்களை பொதுமேடைகளில் வைக்கத் தொடங்கி விட்டதால், அமைச்சரவை சகாக்களின் அணுகுமுறையை மாற்றவும், தமிழக மக்களை ஏமாற்றித் திசை திருப்பிடும் வகையிலும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், கூட்டணிக்கான தேவை இருந்தால் அது தேர்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருப்பதை யாரும் நம்பப் போவதில்லை. “கேழ்வரகில் நெய்வடிகிறது” என்ற பழமொழியைத்தான் நினைத்துக் கொள்வார்கள்.

தமிழக திட்டங்கள் பற்றி வலியுறுத்துவதற்காக பிரதமரைச் சந்தித்தாக ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அப்போது பேட்டி கொடுத்த நிலையில், அப்படி எந்தத் திட்டத்தையும் அவர் வலியுறுத்தவில்லை என்பதைத் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் அம்பலப்படுத்திவிட்டன.

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திற்கும் கிடைத்திடாத வாய்ப்பாக தமிழகத்தின் முதல்வர் மட்டுமல்ல, முன்னாள் முதல்வராக இருந்தவரும் அடிக்கடி பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதற்குக் காரணம், பா.ஜ.க.வின் கிளைக்கட்சியான அ.தி.மு.க.வின் ஆட்சி, பெரும்பான்மை இழந்து அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாக இருந்தாலும், விடாப்பிடியாகத் தொடர வேண்டும் என்பதுதான். அதனை நிறைவேற்றும் வகையில், முதல்வர் பொறுப்பை இழந்து மௌன தர்மயுத்தம் நடத்தியவர், துணை முதல்வர் பொறுப்பேற்றதும் அந்த யுத்தத்தை மறந்து பித்தம் தெளிந்து பதவியைப் பிடித்துக்கொண்டார்.

பதவிப் பிரமாணம் செய்து வைத்த பொறுப்பு ஆளுநரே மெய்மறந்து, முதல்வர் - துணை முதல்வர் இருவரது கைகளையும் சேர்த்து வைத்து, பாஜக ராஜ்பவனின் முக்கிய பணி இதுதான் என்பதை இவ்வையகத்துக்குக் காட்டினார். டெல்லியின் உத்தரவுப்படி நடந்த இணைப்பிற்குப் பிறகு, முன்பு முடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னம், பாஜக தலையீட்டில் வழங்கப்பட்டு, மறுநாளே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அமோகமான பண விநியோகத்துடன் வாக்குப்பதிவு நடந்தது வரை, அனைத்திலும் பா.ஜ.க.வுடனான கூட்டணியின் பலனையும், ஆதாயத்தையும் அதன் கிளைக்கட்சி போல செயல்படும் அ.தி.மு.க அனுபவித்தது.

அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்து, பெரும் கடன்சுமையில் தத்தளிக்கும் நிலையில், ஆட்சியைக் காப்பாற்றி, பதவிச்சுகத்தை அனுபவித்துக் கொள்வதை மட்டுமே ஒரே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் இரட்டைக்குழல் அல்ல, ‘இருட்டுக் குழல்’ துப்பாக்கிகளான இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும், அவர்களைச் சார்ந்தவர்களும் பலவகை லாபங்களுக்காக கூச்சமே இல்லாமல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, அதன் அங்கமாகவே செயல்படும் கிளைக்கட்சியாக, அ.தி.மு.க.வை மாற்றிவிட்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

More News >>