பிரபல ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை

சென்னை மயிலாப்பூரில், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த நல்லகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் சங்கர், அண்ணாநகரில் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தார். இவரது அகாடமியில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

சங்கருக்கும், அவரது மனைவி வைஷ்ணவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மிகவும் மனம் உடைந்த சங்கர், மது அருந்திவிட்டு, சண்டை தொடர்பாக நினைத்துக் கொண்டிருந்துள்ளார். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர், மின் விசிறியில் படுக்கை விரிப்பால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

அவரை மீட்ட குடும்பத்தினர், உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மயிலாப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் வழக்கமான நடைமுறைகளை மேற்கொண்டனர்.

ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடல்கூறு ஆய்வு முடிந்த பிறகு, மீண்டும் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சங்கரின் விபரீத முடிவு குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

More News >>