விவசாயியை விடுவிக்க லஞ்சம் கேட்ட அதிகாரி கைது! வேலூரில்
வேலூர் மாவட்டம் அமிர்தி வனப்பகுதிக்கு அருகே தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவர் கடந்த 40 ஆண்டுகளாக, தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தைக் கொண்டு வருமானம் ஈட்டி வர்ந்துள்ளார். இந்த சூழலில் வயது மூப்பின் காரணமாக, ராமன் ஓய்வெடுக்கத் தொடங்கினார். அவரது மகன் சிதம்பரம், கடந்த 5 ஆண்டுகளாக விவசாய நிலத்தைக் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த திங்கள் அன்று, அமிர்தி வனத்துறை அதிகாரி ராஜா தெக்கூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ராமனின் விவசாய நிலத்திற்கு சென்று, வனப்பகுதிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி, வழக்குப் போட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். அப்போது வீட்டில் சிதம்பரம் இல்லை. பின்னர் ராமனை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து விடுவிக்க ரூ.1.5 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் வனத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார் அங்கு தனது தந்தையை விடுவிக்குமாறு கேட்டுள்ளார் ஆனால் பணம் கொடுக்காமல் விடுவிக்க மறுத்துள்ளார். இதையடுத்து கடந்த செவ்வாய் அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய ராஜா ரூ.60,000க்கு பேரம் பேசியுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமைக்குள் பணம் தரவில்லை எனில் போலி வழக்குகளை பதிவு செய்து சிதம்பரத்தை சிறை வைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிதம்பரம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து டிஎஸ்பி சரவண குமார் தலைமையிலான குழுவினர் திட்டம் தீட்டி லஞ்சம் கொடுக்கும் போது அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 7ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர்.