தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிலை கடத்தல் கும்பல் கைவரிசை
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மாயமானதற்கான முகாந்திரம் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜராம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோவிலின் அர்த்த மண்டபத்தில், கோவில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளில் பல சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜராம் தலைமையிலான குழு 3ஆவது கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையிலான தொல்லியத்துறை அதிகாரிகளும், சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு நடத்தினர். அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகளில், 41 சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுவதால், அவற்றின் தொன்மை குறித்து, சுமார் 4 மணி நேரம் ஆய்வு நடத்தப்பட்டது.
பின்னர் பேசிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜராம், 41 சிலைகள் மாற்றப்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதால்தான் 3ஆம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும்" எனக் கூறினார்.