#HimToo: மீ டூ இயக்கத்துக்கு எதிராக ஹிம் டூ தொடங்கிய அமெரிக்க பெண்
சமீபகாலமாக பரபரப்பாக பேசப்படும் மீ டூ (me too) இயக்கத்துக்கு எதிராக ஹிம் டூ(him too)என்ற பிரச்சாரத்தை அமெரிக்க பெண் ஒருவர் தொடங்கியுள்ளார். ஆனால் அது தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணின் மகனாலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், "இவர்தான் என் மகன். இவர் யூ.எஸ்.ஒ விருது பெற்றவர். பெண்களை மதிக்கும் ஜென்டில்மேன். ஆண்களை எப்போது பாலியல் குற்றச்சாட்டு வலைக்குள் சிக்கவைக்கலாம் எனக் காத்திருக்கும் தீவிர பெண்ணியவாதிகள் இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அவன் யாருடனும் தனியாக டேட்டிங் செல்லமாட்டான். #him tooக்கு நான் வாக்களிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த போஸ்ட் வைரலானது. ஆனால் அந்தப் பெண்ணின் மகன் பீட்டருக்கு இது குறித்து எதுவும் தெரியாது. அவர் ட்விட்டரிலும் இல்லை. தனது சகோதரர் மூலம் தாய் தொடங்கிய பிரச்சாரத்தைத் தெரிந்துகொண்ட பீட்டர் ட்விட்டரில் இணைந்தார்.
பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அந்த ட்வீட்டை பதிவிட்டது எனது தாய். நமக்கு நெருக்கமானவர்களே நிறைய நேரம் நம்மை வேதனைப்படுத்துவார்கள். நாம் அதை கடந்து செல்ல வேண்டும். நான் பெண்களை மதிக்கிறேன் அவர்களை நம்புகிறேன். ஒருபோதும் ஹிம் டூவை (him too)ஆதரிக்க மாட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.