கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 55 பேர் பலி
கென்ய நாட்டின் மேற்கு பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 55 பேர் மரணமடைந்துள்ளனர். 15 பேர் தப்பி பிழைத்துள்ளனர்.
கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து மேற்கு பகுதியிலிருக்கும் நகரமான ககமேகாவுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் சாலையின் சரிவான பகுதியில் இறங்கிய பேருந்து, தலைகீழாக புரண்டுள்ளது. இதில் பேருந்தின் மேல்புறம் முற்றிலும் சேதமுற்றுள்ளது. ஏறக்குறைய 55 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பலர் நின்று கொண்டு பயணித்த நிலையில் 70க்கும் மேற்பட்ட பயணியர் பேருந்தில் இருந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
"பலர் பேருந்துக்குள்ளிருந்து வெளியே வீசப்பட்டனர். விமானத்திலிருந்து வெளியே பறப்பதுபோல் இருந்தது" என்று தப்பிப் பிழைத்த பயணி ஜோசப் ஒபோங்யோ கூறியுள்ளார்.
"ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விட்டார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது," என்று விபத்து நடந்த கெரிகோ பகுதி காவல் அதிகாரி ஜேம்ஸ் முகேரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
"இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமான ஒன்று. இந்தப் பேருந்துக்கு இரவு பயணத்திற்கான அனுமதி வழங்கப்படவில்லை. பேருந்து முதலாளிகள் சட்டத்தை எதிர்கொள்ள நேரும்," என்று போக்குவரத்து காவல்துறையின் அதிகாரி செரோ அரோமே கூறியுள்ளார்.
72 வயது நபர் ஒருவர் பேருந்தை ஓட்டினார் என்றும் தாறுமாறான வேகத்தில் பேருந்து சென்றதே விபத்துக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.