கர்நாடகாவில் அரசியல் கலாட்டா: அமைச்சர் ராஜினாமா

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. கர்நாடக மாநில அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் என்.மகேஷ் பதவி விலகியுள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை. ஆகவே, மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான், குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அரசு அமைத்தது. ஆனால், தேர்தலுக்கு முன்பே மாயாவதியின் பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருந்தது.

அக்கட்சியின் சார்பில் கொள்ளேகால் தொகுதியில் போட்டியிட்ட என். மகேஷ், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஒரே சட்டப்பேரவை உறுப்பினரை கொண்ட பகுஜன் சமாஜ் கட்சிக்கும் அமைச்சரவையில் பங்கு கிடைத்தது. கர்நாடக முதல் அமைச்சராக ஹெச்.டி.குமாரசாமி பதவியேற்றபோது, சோனியா, ராகுல் காந்தியுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும் கலந்து கொண்டார். அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக பேசப்பட இது வழிவகுத்தது.

தற்போது, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் தொகுதி உடன்பாடு எட்டப்படாததால், பகுஜன் சமாஜ் காங்கிரஸூடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று மாயாவதி அறிவித்தார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இரு மாநிலங்களிலும் காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என்று மாயாவதி அறிவித்த ஒரு வார காலத்திற்குள் அவரது கட்சி உறுப்பினர் என்.மகேஷ் அமைச்சர் பதவியை ராஜினா செய்துள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"எனது தொகுதியில் கவனம் செலுத்தப்போகிறேன். மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் நாங்கள் தொடருகிறோம். வரும் மாண்டியா மற்றும் ராம்நகர் இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்வேன். தனிப்பட்ட காரணங்களுக்காகவே அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளேன். சட்டப்பேரவை உறுப்பினராக தொடருவேன்," என்று பதவி விலகிய என்.மகேஷ் கூறியுள்ளார்.

"இது அவர்கள் உட்கட்சி விவகாரம். அவர் இந்த முடிவை எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களோடு தொடர்பில் இருக்கிறேன். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவேன்," என்று கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

More News >>