சரணகோஷம் எழுப்பி பாஜகவினர் முற்றுகை போராட்டம்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவசம்போர்டு துறை அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன் வீடு அமைந்துள்ள திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கூடினர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கூடாது என்று அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷங்களையும் எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் அமைச்சரின் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பை அகற்றிக் கொண்டு முன்னேற முயன்றனர். அவர்கள் மீது போலீசார் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்ட முயன்றனர்.
இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளையும் போலீஸார் வீசினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது அங்கு குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர் போராட்டக் காரர்களை விரட்டி அடித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கும் தீர்ப்பை மற்ற மதத்தினரும் ஏற்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் கூறியுள்ளனர். 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல கூடாது என்று ஐதீகம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆனால், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மாநில அரசு அமல்படுத்த முயன்று வருகிறது. இதற்கு, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சியும், இந்து அமைப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.