சச்சினை முறியடித்து அபார சாதனைகள் படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றிருந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் 76 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 102 ரன்களும் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் எடுத்தார். இது அவரது 23ஆவது சதமாகும். இந்த டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார்.
* இதன் மூலம் மெல்போர்ன் மைதானத்தில் தொடர்ச்சியாக எடுத்த அவரது நான்காவது சதமாகும். முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் நான்கு முறை மெல்போர்ன் மைதானத்தில் நான்கு முறை சதம் விளாசியுள்ளார். அந்த சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார்.
* இந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 1305 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 76.76 ஆகும், மேலும், தொடர்ச்சியாக 2014, 15, 16, 17 ஆகிய நான்கு ஆண்டுகளும் ஆயிரம் ரன்களுக்கு மேலாக குவித்துள்ளார். முன்னதாக லாரா தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் [2003, 04, 05] ஆயிரம் ரன்களுக்கு மேலாக குவித்திருந்தார்.
இந்த சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். அதிகப்பட்சமாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன் ஐந்து ஆண்டுகள் [2001, 02, 03, 04, 05] ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். மேலும், இந்த நான்கு ஆண்டுகளிலும் அவரது சராசரி 70க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
* இந்த ஆண்டு ஸ்மித் 6 சதங்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக சதம் விளாசியவர்களில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார்.
* இந்த சதத்தின் மூலம் குறைந்த இன்னிங்ஸில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 123 இன்னிங்ஸில் 22 சதங்களை விளாசினார். ஆனால் ஸ்மித் 110 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, டான் பிராட்மேன் 59 இன்னிங்ஸிலும், சுனில் கவாஸ்கர் 109 இன்னிங்ஸிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
* கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் 15 சதங்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் கேப்டனாக அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக் ஆகியோருடன் ஸ்மித் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் 25 சதங்களும், ரிக்கி பாண்டிங் 19 சதங்களும் எடுத்துள்ளனர்.