கபாலீஸ்வரர் கோயில் சிலை- அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் விசாரணை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக விழாவின் போது, புன்னைவனநாதர், ராகு, கேது மூன்று சிலைகள் மாற்றப்பட்டதாகவும், அவை கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக முன்னாள் ஸ்தபதி முத்தையா ஆகியோரிடம் மயிலாப்பூர் கோயிலில் வைத்து விசாரணை நடந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை வியாசர்பாடியில் உள்ள, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் விசாரணை நடைபெற்றது. டி.எஸ்.பி குமார் தலைமையில், ஒரு பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு விசாரணை செய்தது. முதல் முறையாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரிக்கப்படுபவர் பெண் என்பதால் சட்டப்படி வீட்டிற்கு சென்று விசாரணை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாகவும், மேலும் விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

More News >>