ரவுடிகளுடன் துப்பாக்கிச் சண்டை - பீகாரில் போலீஸ் அதிகாரி பலி

பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவல் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பீகாரில் ககாரியா மாவட்டத்தின் எல்லையில் கங்கையாற்றில் சலார்பூர் என்னும் சின்ன தீவு உள்ளது.

குற்றவாளிகள் பதுங்கும் இடமாக அறியப்பட்ட இத்தீவில் தினேஷ் முனி என்ற ரவுடி தன் கும்பலுடன் பதுங்கியிருப்பதாக பஸ்ராகா காவல் நிலைய அதிகாரி ஆஷிஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது.

ஆஷிஷ் குமார் வெள்ளியன்று அதிகாலை 2 மணிக்கு நான்கு காவலர்களுடன் தினேஷ் முனியை பிடிப்பதற்காகச் சென்றார்.

போலீஸ் வருவதை அறிந்ததும் ரவுடி கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவல் அதிகாரி ஆஷிஷ் குமார் (வயது 32) மார்பில் குண்டு பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

ரவுடி கும்பலில் ஒருவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்த உயர் காவல் அதிகாரிகள் மீனு குமாரி கோக்ரி மற்றும் பிரமோத் குமார் ஜா ஆகியோர் கூடுதல் போலீஸ் படையுடன் அங்கு விரைந்தனர். ரவுடி பிடிபட்டாரா இல்லையா என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை.

கடமையே கண்ணான காவல் அதிகாரி ஆஷிஷ் குமார், கடந்த ஆண்டு இதே இடத்தில் ஒரு ரவுடி கும்பலுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் குண்டு பாய்ந்து காயமுற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷிஷ் குமாரின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சகோதரர்களில் ஒருவர் எல்லை பாதுகாப்பு படையிலும் மற்றொருவர் எஞ்ஜினியராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஆஷிஷ் குமார், சமூக அக்கறை கொண்ட தைரியமான அதிகாரி என்ற அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More News >>