சூரத் குடோனில் பயங்கர தீ விபத்து
ஜெய்ப்பூர்: குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குஜராத் மாநிலம், சூரத் நகரில் ஏராளமான குடோன்கள் உள்ளன. இந்நிலையில், ராண்டர் டவுன் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு திடீரென தீ பிடித்தது. அங்கிருந்தவர்கள், தீ பற்றி இருப்பதை உணர்வதற்குள் தீ மளமளவென பரவி பயங்கரமாக எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகையாக காணப்பட்டது.
தீ விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்தனர். 12க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் மும்பையில் கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியான நிலையில், குஜராத்தில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.