#Metoo: பெண்களுக்கான மீடூ புயல் கடந்துவந்த பாதை!
கடந்த வருடம் ஹாலிவுட்டில் ஹார்வி வின்ஸ்டீன் என்ற தயாரிப்பாளர், பல வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, அலீஸா மிலானோ என்ற நடிகை ட்விட்டரில் #Metoo என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.
இதோடு பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்கள் அனுபவங்களைப் பகிர முன்வர வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து, ஹாலிவுட்டில் மீடூ, ஒரு இயக்கமாக மாறி, இதன் மூலம் பலரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்நிலையில் இந்தியாவிலும் மீ டூ (Me too) இயக்கம் வலுப்பெற்று வருகிறது.
அதிகாரம் படைத்த ஆண்களால் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகள் இவ்வளவு காலமாக அதிகாரம் ஆளுமை போர்வையால் மறைத்து வைக்கப்ட்டிருந்தது, அப்போர்வையை கிழித்தெரியும் கூர்வாளாக மீ டூ இயக்கம் (#MetooMovement) தொடங்கப்பட்டது.
2006ம் ஆண்டு அமெரிக்காவில் தாராணா பர்க்கால் (Tarana Burke) பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்கொடுமைகளை வெளிகொண்டுவர தொடங்கபட்ட மீடூ (Metoo) வால் இன்று உலக முழுவதும் உள்ள ஆண்களின் முகத்திரை கிழியத் தொடங்கியுள்ளது.
தனது கண்ணீரையும் குமுறல்களையும் பல ஆண்டுகளாக புதைத்து வைத்திருந்த பெண்கள் இப்பொழுது தைரியமாக வெளியே சொல்ல தொடங்கிவிட்டார்கள் அந்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட ஆண்களும் உண்டு, தவறை செய்யவில்லை என்று வாதாடும் ஆண்களும் உண்டு எங்கே தன் பெயரும் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கும் ஆண்களும் உண்டு.
கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த மீடூ இயக்கம் சமூக வலைதளங்களில் பரவத்தொடங்கியது. இதற்கு காரணம் ஒரு அமெரிக்க நடிகை.
அலிஸன் மிலானோவாஸ் தனது டிவிட்டரில் 15 oct 2017 அன்று பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஹார்வி வெய்ன்ஸ்டன் மீது பாலியல் குற்றசாட்டை சொன்னார் இந்த டிவிட் ஒரே நாளில் 200,000 நபர்களால் விரும்பட்டது, ஒரே நாளில் 50,00,000 அதிகமானோரால் ரீடிவிட் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் உள்ள பெண்கள் தாமாக முன்வந்து பல பாலியல் குற்றசாட்டை பதிவு செய்தார்கள். பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிற்கு இலக்கான ஆஸ்கார் விருது வென்ற திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டைன் வெய்ன்ஸ்டைன் திரைப்பட ஸ்டூடியோ நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இவர் மீது தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, க்வினெத் பேல்ட்ரோ, ரோஸ் மெக்குவான், சல்மா ஹாயாக், குற்றம்சாட்டினர். ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை ஹார்வே தொடர்ந்து மறுத்து வந்தார்.
தொடர்ந்து மேலும் பல பிரபலங்கள் அரசியல்வாதிகள் மீது குற்றசாட்டுகள் சொல்லப்பட்டது.
குற்றசாட்டிற்கு ஆளான சில பிரபலங்கள்:
பாலியல் அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைக்கல் ஃபலோன் பதவி விலகியதும் நடந்தது, இதனால் சமூக வலைதளங்களின் #Metoo மேலும் பரவ தொடங்கியது.
நீதிபதியாக பிரெட் கேவனோவை அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிறுத்தியதும், அவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாயினார். இருப்பினும் அமெரிக்க நீதிபதி பிரெட் கேவனோவுக்கு முக்கிய செனட் உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் அவரின் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றசாட்டு ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே கருதப்பட்டது.
இந்தியாவில் மீடூ(Me too)
#MeToo movement என்ற ஹேஷ்டேக் மூலம் பல ஹாலிவுட் பிரபல நடிகைகள் தாங்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக பதிவுகளை வெளியிட்டனர். இதை பின்பற்றி நம் ஊர் கோலிவுட் வரை நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த சோகத்தை பகிர்ந்தனர்.
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #Metoo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுலக பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நானா படேகருக்கு எதிராக தனுஸ்ரீ தத்தா அளித்திருக்கும் புகார்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பெரிதானதை தொடர்ந்து மத்திய அரசுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த விவகாரத்தில் அக்பர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, சினிமா வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னை ஏமாற்றிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் மீது குறப்பட்ட பாலியல் குற்றசாட்டை ஏற்றுக்கொண்டு அந்த பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.
இவ்வாறு அமெரிக்காவில் வீசிய மீடூ புயல் சரியாக ஒரு வருடம் ஆன நிலையில் தமிழ் நாட்டு கவிஞர் மீது வீச தொடங்கியது.
சேத்தன் பகத் குற்றசாட்டை தொடர்ந்து பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றசாட்டுகளை வைக்க தொடங்கினார், ஒரு தரப்பினார் சின்மயிக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறினாலும் சிலர் இது குறிப்பாக வைரமுத்துவை பழிவாங்க கூறப்படும் புகாராகவே கருதுகின்றார்கள்.
மேலும், சின்மயியிடம் அப்பொழுது நடந்ததுக்கு இப்போ ஏன் குற்றசாட்டு கூறவேண்டும் என கேள்விகள் எழுப்படுகிறது.
இது குறித்து கூறிய பாடகி சின்மயி, “தனக்கு தகப்பன் இல்லாமல் தனியாக தாயுடன் வாழ்ந்து வந்ததாகவும் தனது திருமணம் முடியும் வரை, தான் தனியாக எந்த ஒரு முடிவும் எடுத்தது இல்லை எனவும் கூறியுள்ளார். வைரமுத்து தவறாக நடந்து கொண்டது உண்மை, இப்போ நான் பிரபலமாகி அனைவருக்கும் தெரியும் நிலையில் உள்ளேன்.
இப்பவே நான் சொல்றத சிலர் நம்பாமல் கிண்டல் செய்றாங்க 10 வருஷதுக்கு முன்னாடி நான் சொல்லியிருந்தா யாரவது காது குடுத்து கேட்டு இருப்பாங்களா, அப்போ ஒரு முணு நாளு சேனல் தான் இருந்தது அப்போ நான் டீவி வாசல்ல நின்னு வைரமுத்து மீது குற்றசாட்டு சொன்ன யாரவது அத வெளில சொல்லியிருப்பாங்களா?
அதும் அவர் பெரும் அரசியல் பலம் படைத்தவர் அவர் முன்னாடி, தனியா நிற்கும் பெண்ணாகிய நான் குற்றம் சுமத்தினால் வாழ முடியுமா” என ஆதங்கத்தோடு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.
“ஒரு பெண் யார் மீதாவது குற்றம் சுமத்தினால் அப்பெண்ணை அசிங்கபடுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.”
தற்போது ஊடகம், சினிமா, தொலைக்காட்சி, தனியார் நிறுவனம் என பல துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்துல்களை தைரியமாக பேசுவதோடு தொடர்புடைய குற்றவாளிகளையும் அம்பலப்படுத்துகின்றனர்.
இவற்றில் சில பொய்யான குற்றச்சாட்டுகள், தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுகிறது எனவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர் இது உண்மையாகவே இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் உண்மையாகவே தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இதுவரை பேசாமல் பேச முடியாமல் இருந்த துன்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய பண்பாட்டின் படி பாலியல் சமத்துவமும் இல்லை, மக்களிடையே சமூக சமத்துவமும் இல்லை. அதனால் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் தம் கீழ் பணியாற்றும் பெண்களை துன்புறுத்துகின்றனர் இந்த நிலை மாற வேண்டும்.
இதற்காக தொடங்கப்பட்டதுதான் மீடூ இயக்கம் (Me too- Movement), பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். விரைவில் பெண்கள் யாரும் தனியாக இல்லை என்பதை புரிந்து கொள்வார்கள் என்பதே இதன் நோக்கம் .
காலம் பதில் சொல்லும் இந்த மீடூ(Me too) நெருப்பில் எத்தனை ஆண்களின் போலி முகம் எரியப்போகிறது என்று.தொடர்சியாக வரும் குற்றசாட்டுகளை தொடர்ந்து, “இந்தியாவில் பாலியல் புகார்களை விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்படும்” என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
தமிழ் நாட்டு கல்வி துறையிலும் பாலியல் குற்றங்கள் தொடர்வதுதான் மிகவும் கொடுமை. நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசான்களே மாணவர்களை தவறான பாதைக்கு வழிகாட்டுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலை மாற வேண்டும் இல்லை என்றால் நாங்கள் பண்பாடில் சிறந்தவர்கள் என பெருமைபட்டுக்கொள்வதில் அர்த்தம் இருக்காது. இதற்கான முயற்சி வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க கற்று கொடுக்க வேண்டும் கற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் சமம் என்று வளர்க்க வேண்டும்.
சினிமா துறையில் நடிப்பவர்கள் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் நல்ல முறையில் எடுத்துக்காட்டாய் நடிக்க வேண்டும்.