நீதிபதியின் மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்

குர்கானில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதியின் பாதுகாவலர், நீதிபதியின் மனைவியையும் மகனையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். நீதிபதியின் மகன் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குர்கானில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வருபவர் கிருஷ்ணன் காந்த் சர்மா. இவரது மனைவி ரித்து (வயது 38), மகன் துருவ் (வயது 18). நீதிபதி சர்மாவின் தனி பாதுகாவலராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் மஹிபால் சிங்.

இன்று பிற்பகல், கடைகளுக்குச் செல்வதற்காக நீதிபதியின் மனைவியும், மகனும் ஹோண்டா சிட்டி காரில் சென்றனர். குர்கானின் 49வது செக்டாரில் உள்ள கடைவீதியில் அவர்கள் பொருட்கள் வாங்குவதற்காக இறங்கினர். அப்போது பாதுகாவலரான மஹிபால் சிங், தமது துப்பாக்கியால் ரித்துவை மார்பிலும், துருவ்வை தலையிலும் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

சுட்ட பின்னர், துருவ்வை காரினுள் இழுத்துப் போடுவதற்கும் மஹிபால் முயற்சித்துள்ளார். அந்தக் காட்சியை குற்ற நிகழ்வு நடந்த இடத்தில் உள்ள ஒருவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நீதிபதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மஹிபால் சிங், "உங்கள் மனைவியையும், மகனையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டேன்," என்று கூறியுள்ளார். முதலில் காவல் நிலையம் ஒன்றிற்கு காரில் சென்ற மஹிபால், பின்பு அதே காரில் தப்பிச் சென்றுள்ளார். அவரை காவல்துறையினர் குர்கான் - பரிதாபாத் சாலையில் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மஹிபால் சிங், மிகுந்த மன அழுத்தத்தில், மனோவியல் பாதிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. சுடப்பட்ட நீதிபதியின் மனைவி ரித்துவுக்கும், மகன் துருவ்வுக்கும் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகன் துருவ், அபாய கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வேலியே பயிரை மேய்ந்தது போன்று, நீதிபதியின் தனி பாதுகாவலரே, அவரது மனைவியையும் மகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More News >>