இந்தோனேசியாவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலி
இந்தோனேசியாவில் கனமழை பெய்து வருவதன் எதிரொலியால், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கி சுமார் 22 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தோனேசியாவில் கடந்த மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம், தொடர்ந்து சுனாமி, எரிமலை வெடிப்பு என இயற்கை சீற்றங்கள் அடுத்தடுத்து வந்து சுமார் 2000 பேரின் உயிரை காவு வாங்கியது.
இந்நிலையில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதில், சுமத்ரா தீவின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டெய்லிங் நடால் மாவட்டத்தில் உள்ள மவுரா சலாதி கிராமத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் உறைவிட பள்ளி நிலச்சரிவில் சிக்கி இடிந்து விழுந்தது.
இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 11 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 11 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். இதனால், நிலச்சரிவில் சிக்கி மொத்தம் 22 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைதவிர, 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றும், மாயமாகி உள்ள 15க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.