பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்கான அதிரடி திட்டங்கள்: தெலங்கானா அரசு அறிவிப்பு
ஐதராபாத்: பிச்சைக்காரர்கள் இல்லாத தலைநகரமாக ஐதரபாத்தை மாற்றும் வகையில், தெலுங்கானா அரசு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில், பிச்சை எடுப்பதை தடுக்கும் வகையில், அம்மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில், பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மீட்கப்படும் பிச்சைக்காரர்களுக்கு கல்வி அளிப்பதுடன், பெட்ரோல் பங்குகளில் வேலை வாய்ப்பு வழங்கவும், திறன் பயிற்சி அளிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
தெலங்கானா அரசு, ஆயுர்வேத மருத்துவ கிராமங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான கட்டுமான பணிகளில் இவர்களை ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிச்சைக்காரர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் ஐதராபாத் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை மீட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில், 335 நேர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஐதராபாத்தில் உள்ள சாலை, தெருக்களில் பிச்சைக்காரர்கள் யாராவது இருப்பது குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.500 பரிசாக வழங்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், ஐதராபாத் விரைவில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.