டிட்லி புயலால் பாதிப்பு: ரூ.1200 கோடி நிதி வழங்க சந்திரபாபு நாயுடு கோரிக்கை

டிட்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1200 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் தீவிர புயலாக மாறி ஆந்திரா, ஒடிசா இடையே கடந்த வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் எதிரொலியாக, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை கொட்டித்தீர்த்தது.

கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால், மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்களும் நாசமானது. ஒடிசா மாநிலத்தில் கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கி சுமார் 12 பேர் பலியாகினர். 4 பேர் மாயமாகி உள்ளனர்.இதேபோல், ஆந்திராவில் ஏற்பட்ட கடும் பாதிப்பில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திராவையே புறட்டிப்போட்ட டிட்லி புயலால் மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சரி செய்ய 2800 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், இடைக்கால நிவாரணமாக ரூ.1200 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்ண.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள கடிதத்தில், டிட்லி புயலால் ஆந்திராவில் 3 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மாநில அரசு நிவாரணப்பணிகள் மேற்கொண்டு வருகிறது. சுமார் 2800 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால நிவாரண நிதியாக ரூ.1200 கோடி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பொறுத்தவரையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் என்றும், கஞ்சம் பகுதிகளில் 4க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு நிவாரண உதவியாக தலா ரூ.3000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

More News >>