மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து, வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுவடைந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை தாக்கியது. இதனால், புயல், கனமழை எதிரொலியால் இரு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்தது. இதற்கிடையே, அரபிக்கடலில் உருவாகியுள்ள லூபன் புயல் இன்று ஏமன் மற்றும் தெற்கு ஓமன் கடற்கரைகளில் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கடலோர ஆந்திரா, கேரளாவின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கர்நாடகத்தின் தெற்கு உள் மாவட்டங்கள், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லூபன் புயல் இன்று ஏமன் மற்றும் தெற்கு ஓமன் கடற்கரைகளில் கரை கடக்கும் நேரத்தில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மேற்கு மத்திய அரபிக் கடல் மற்றும் தெற்கு ஓமன், ஏமன் கடற்கரைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் இதன் தாக்கம் வளைகுடாவிலும் இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு அரபிக்கடல், தெற்கு ஓமன் கடற்பகுதி, ஏமன் கடற்பகுதி, ஏதன் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இதேபோல், அக்டோபர் 15,16,17 ஆகிய தேதிகளிலும் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News >>