போலி என்கவுண்டர்: மேஜர் ஜெனரல் உள்பட ஏழு பேருக்கு ஆயுள்

அஸ்ஸாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் என கூறி ஐந்து வாலிபர்களை கொன்ற வழக்கில் மேஜர் ஜெனரல், கர்னல், கேப்டன்கள் உள்பட ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1994ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி, அஸ்ஸாமின் டின்சுகியா மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த ஒன்பது பேரை இராணுவத்தினர் பிடித்தனர்.தேயிலை தோட்டத்தின் உயர் அதிகாரி ஒருவரது கொலையில் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தினை (AASU - All Assam Students Union)சேர்ந்த அந்த இளைஞர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களுள் ஒருவருமான ஜெகதீஷ் புயான் பிப்ரவரி 22ம் தேதி கௌஹாத்தி உயர்நீதி மன்றத்தில் அந்த இளைஞர்களின் நிலை குறித்து அறிவிக்கக் கோரி ஹேபியஸ் கார்பஸ் என்னும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

கௌஹாத்தி உயர்நீதிமன்றம் ஒன்பது பேரையும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தும்படி இராணுவத்திற்கு உத்தரவிட்டது. இராணுவம் ஐந்து பேரில் உயிரிழந்த சடலங்களை டோலா காவல் நிலையத்தில் ஒப்படைத்தது.

ஒன்பது பேரில் ஐந்து பேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். அவர்கள் உல்பா (ULFA -United Liberation Front of Assam) என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. எஞ்சிய நான்கு பேர் சில நாட்கள் கழித்து இராணுவத்தால் விடுவிக்கப்பட்டனர்.

24 ஆண்டுகள் பழமையான இந்த வழக்கில் இராணுவத்தினர் மீதான விசாரணை இந்த ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. கடந்த சனிக்கிழமையன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் ஏ.கே.லால், கர்னல் தாமஸ் மேத்யூ, கர்னல் ஆர்.எஸ்.சிபிரன், கேப்டன் திலீப் சிங், கேப்டன் ஜக்டியோ சிங், நாயக் அல்பிந்தர் சிங் மற்றும் நாயக் ஷிவேந்தர் சிங் ஆகியோருக்கு போலி என்கவுண்டரில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. திப்ரூஹரில் அமைந்துள்ள இந்திய இராணுவ பிரிவு அலுவலகம் இதை உறுதி செய்துள்ளது.

வழக்கு தொடர்ந்த ஜெகதீஷ் புயான் இந்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "நமது நீதி பரிபாலன அமைப்பு, ஜனநாயம் மற்றும் இந்திய இராணுவத்தின் ஒழுங்கு, பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றின்மேல் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளேன்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News >>