அரசியல் களத்தில் குதிப்பாரா ரஜினி ? இன்னும் சில நிமிடங்களில் அறிவிப்பு

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த நான்கு நாட்களாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.

கடந்த மே மாதம் இதேபோல், பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்தபோது போருக்கு தயாராகுங்கள் என்று ரஜினி கூறியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் விரைவில் புதுக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கப்போகிறார் என்ற யூகங்கள் மக்களிடையே பரவியது.

இதையடுத்து, 2.0 மற்றும் காலா படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த 27ம் தேதி முதல் ரஜினி ரசிகர்களை சந்தித்து வருகிறார். இறுதி நாளான இன்று ரஜினி அரசியல் பிரவேசம் எடுப்பாரா என்பது பற்றிய அறிவிப்பை தெரிவிப்பார் என ரஜினி ஏற்கனவே கூறியிருந்தார். இதனால், தமிழக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதன் எதிரொலியாக காலை முதலே ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகம் முழுவதும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. கோடாம்பாக்கத்தில் பேனர்கள் வைத்து, ரஜினியின் உருவ படத்திற்கு அவரது ரசிகர்கள் டிருஷ்டி பூசணிக்காய் உடைத்து தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.இங்கு, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்னும் சில நிமிடங்களில் ரஜினி காந்த் தனது அரசியல் பற்றிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ரஜினியின் அரசியல் அறவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More News >>