நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடக்குமா? #MeToo
இந்தியாவில் மீடூ விவகாரத்தை விஸ்வரூபம் எடுக்க செய்தவர் தனுஸ்ரீதத்தா. பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உள்பட நான்கு பேர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ, தற்போது வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டி இருந்தார்.
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்து வந்தார். தனு ஸ்ரீதத்தா பொய் கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து நானா படேகர் உள்பட 4 பேர் மீது போலீசார் 354 மற்றும் 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது, நானா படேகரை உடனே கைது செய்ய வேண்டும். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று ஒஹிவாரா போலீசில் நடிகை தனுஸ்ரீதத்தா வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் சார்பில் வக்கீல் நிதின் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். அவர்கள் நெருக்கடி கொடுத்து சாட்சிகளை கலைத்து வெளியே வரக் கூடியவர்கள். இதனால் நானாபடேகர் உள்பட 4 பேரை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்.
இவ்வாறு ஒஹிவாரா போலீசில் அளித்துள்ள மனுவில் தனு ஸ்ரீதத்தா தெரிவித்துள்ளார்.