ஆன்லைன்ல ஆர்டர் செய்ங்க.. வீட்டுல ஜம்முனு குடிங்க.. அரசு புதிய திட்டம்
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி கொண்டு வரும் மதுபானங்களை விநியோகம் செய்ய மகாராஷ்டிரா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் பல மாநிலங்களிலும் மது விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்திலும் மது விற்பனையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளது அம்மாநில அரசு.
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன. இதனை தடுக்கும் வகையில், ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்து, ஆர்டர் செய்பவர்களின் வீட்டிற்கே வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மகாராஷ்டிரா மாநிலம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில கலால் வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது: பொது மக்கள் மது குடிப்பதற்காக சம்பந்தப்பட்ட கடைக்கு வாகனத்தில் சென்று, குடித்துவிட்டு வாகனம் ஓட்டு சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது.
பொதுமக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில், பொது மக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், மதுபானங்கள் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்தால் மது குடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் எண்ணத்தில் இத்திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, மாநிலத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால், அரசுக்கு ரூ.15 ஆயிரத்து 343 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், ஆன்லைனில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்தால் அதிக வருவாய் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.