தமிழர்களை விட பாகிஸ்தானியர்களை நெருக்கமாக உணர்கிறேன் - சித்து
தமிழ்நாட்டுக்குச் செல்வதை விட, பாகிஸ்தானுக்கு செல்லும்போது மிகவும் அந்நியோன்யமாக உணர்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். சித்துவின் இந்தப் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இமாச்சல பிரதேசத்திலுள்ள கசோலியில் இலக்கிய விழா ஒன்றில் சித்து பங்கேற்றார். அங்கு உரையாற்றும்போது, இந்தியாவிலுள்ள பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் இரண்டு இடங்களிலுமே ஒரே பண்பாடு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“நான் தமிழ்நாட்டுக்குச் செல்லும்போது, அவர்கள் பேசும் மொழியில் ஓரிரு வார்த்தைகள் தவிர மற்றவற்றை என்னால் புரிந்து கொள்ள இயலாது. அங்குள்ள உணவை நான் விரும்பவில்லை என்று கூற இயலாவிட்டாலும் அதிக நாட்கள் அங்குள்ள உணவை சாப்பிட இயலாது.
தமிழ்நாட்டு பண்பாடு முற்றிலும் வேறானது. ஆனால், நான் பாகிஸ்தான் சென்றால், அங்குள்ள மக்கள் பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழிகளை பேசுவதால், அவர்களை அதிக நெருக்கமாக உணர முடிகிறது," என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.
“மற்றவர்களை புகழ்வது தவறல்ல. ஆனால், அதற்காக சொந்த நாட்டு மக்களை பற்றி கண்ணிய குறைவாக பேசக்கூடாது. அமைச்சராக இருக்கும் சித்து, தன் வார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும்" என்று சிரோமணி அகாலி தளத்தின் செய்தி தொடர்பாளர் தல்ஜித் சிங் சீமா கூறியுள்ளார். தான் தவறாக எதுவும் கூறிவிடவில்லையென்றும், தேவையில்லாமல் சர்ச்சை கிளப்பப்படுவதாகவும் சித்து விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் சென்றிருந்த சித்து, பாகிஸ்தான் இராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பாஜ்வாவை கட்டி அணைத்த விஷயமும் சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சையை கிளப்புவது எனக்கு சப்பாத்தி சாப்பிடுறது மாதிரின்னு சொல்லுவாரு போல...