அரசியலுக்கு வருவது உறுதி: ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதகளிலும் போட்டியிட இருப்பதாக நடிகர் ரஜினகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளார்.

கோடாம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ஐந்தாவது நாளாக நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை சந்தித்தார். அரசியல் பிரவேசம் எடுப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று ரஜினி ஏன்கனவே தெரிவித்திருந்தார். இதனால், தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருந்தது.

இதன் எதிரொலியாக காலை முதலே ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகம் முழுவதும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. கோடாம்பாக்கத்தில் பேனர்கள் வைத்து, ரஜினியின் உருவ படத்திற்கு அவரது ரசிகர்கள் டிருஷ்டி பூசணிக்காய் உடைத்து தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இங்கு, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்னும் சில நிமிடங்களில் ரஜினி காந்த் தனது அரசியல் பற்றிய முடிவை அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் உறுதியாக அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்களிடையே பெரும் கரகோஷங்கள் எழும்பின.

மேலும் இதுகுறித்து ரஜினி பேசியதாவது: ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை ஒழுக்கத்துடன் எந்த தொந்தரவுமின்றி நடத்தி வைத்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி. போலீஸ் துறை, மீடியாக்களுக்கும் நன்றி. நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி தொடங்கி, வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடுவேன். இது காலத்தின் கட்டாயம். காலத்தின் கட்டளை. குறுகிய காலமே இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. நாடாளுமன்றம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவெடுப்பேன். அரசியலில் வருவதற்கு காரணம் பதவி ஆசைக்காக இல்லை. 48 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லாதபோது, 68 வயதில் பதவி ஆசை வருமா?. தமிழகத்தில் மக்கள் பட்டு வரும் வேதனைகள் தான் தன்னை அரசியலில் குதிக்க தூண்டி உள்ளது. தமிழ்நாட்டில் எல்லாம் மாற வேண்டும்.இவ்வாறு ரஜினி கூறினார்.

More News >>