பட்டாசு கடைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகள்.

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும்போது உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. பட்டாசு விற்பனைக்காக கடைகள் ஒப்பந்தம் விடப்படும். இதற்கான வழிமுறைகளை உருவாக்கி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2013 அக்டோபர் 7ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கான ஒப்பந்தம் எடுப்பவர்கள் தற்காலிக கடைகள் அமைக்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும்

ஒவ்வொரு கடைகளும் தனித்தனியாக ஒரே வரிசையில் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தீப்பிடிக்காத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் கடைகள் அமைக்கப்பட வேண்டும். விபத்து ஏற்பட நேர்ந்தால் உடனடியாக வெளியேறும் வகையில் அவசர வழி, ஆம்புலன் வசதி, முதல் உதவி கவுண்டர்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் எதையும் ஒழுங்காக கடைபிடிக்காமல் பட்டாசு கடைக்கு சென்னை மாநகராட்சி, போலீசார், தீயணைப்பு துறை, சுற்றுலாத்துறை, மற்றும் வெடிபொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அனுமதி அளித்து வருவதாக கூறி, சூளைமேட்டைச் சேர்ந்த எம்.முனியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உரிய பாதுகாப்பு வழிமுறைகளின்படி பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, வரும் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

More News >>