ஊழலை ஒழித்தால் இந்தியா முன்னேறும்- ஆளுநர் பன்வாரிலால்
ஊழலை ஒழித்தால் இந்தியா மிகப்பெரிய அளவிற்கு முன்னேற்றம் அடையும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இறுதி மூச்சு வரை மிக மிக எளிமையாக வாழ்ந்தார். தேச தந்தை காந்தி, கலாமை போல் மாணவர்கள் எளிமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், ஊழலை மட்டும் ஒழித்து விட்டால் இந்தியா மிகப் பெரும் ஒரு வளர்ச்சியை அடைந்த நாடாக மாறும் என்று கூறினார்.