சென்னை கொரட்டூரில் ரூ.350 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

சென்னை கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றியதன் மூலம் அரசுக்கு சொந்தமான 350 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 29 ஏரிகளில் ஒன்றான கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி அக்டோபர் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளது. காவல்,தீயணைப்பு, வருவாய், பொதுப்பணி, மாநகராட்சி உள்பட அரசின் 8 துறைகள் இணைந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

முதற்கட்டமாக கொரட்டூர் ஏரியிலுள்ள மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர், எஸ்.எஸ். நகர்,கங்கை நகர், தனலட்சுமி நகர் பகுதிகளிலுள்ள 567 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு அவர்களில் தகுதியான 437 குடும்பங்களுக்கு சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கத்தில் தமிழ் நாடு  குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அரசால் பல வருடங்களுக்கு முன்பு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட நிலங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து விதி மீறல்கள் இருப்பின் அவற்றை மீட்பதற்கு நீதி மன்றங்களின் ஒத்துழைப்புடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களுள் ஒவ்வொன்றுக்கும் மறுகுடியமர்த்தலுக்கு ரூ.5 ஆயிரம், மூன்று நாட்கள் உணவு செலவு ரூ.3 ஆயிரம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் பிழைப்பூதி ரூ.2,500 ஒரு வருடத்திற்கு வழங்க அரசு பரிந்துரைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் நோக்கத்துடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More News >>