குரூப் 2 விதிகளை எதிர்த்து வழக்கு- டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு!

குரூப் 2 தேர்வில், கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்  மாணவர்களையும் அனுமதிக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசும், டிஎன்பிஎஸ்சியும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட குருப் 2 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில், பட்டபடிப்பு முடித்தவர்கள் மட்டுமே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.இதை எதிர்த்து, சென்னை சூளைமேட்டை சேர்ந்த இளையபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்1 தேர்வுகளுக்கும் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், இந்த தேர்வுக்கு பட்டபடிப்பு முடித்தவர்கள் மட்டுமே பங்குபெற முடியும் என தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணை தவறு எனக் கூறப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களும் குருப் 2 தேர்வில் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு 23ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளருக்கு உத்தரவிட்டார்.

More News >>