சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு?- தேர்வு வாரியம் முற்றுகை
சிறப்பு ஆசியர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 300க்கும் மேற்பட்டோர் சென்னையில் உள்ள தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டனர்.
பள்ளிக்கல்வித்துறையில் தையல் ஓவியம் உடற்கல்வி உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் 1400 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 12ஆம் தேதி இரவு வெளியிடப்பட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இந்த தேர்வு முடிவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது தற்போது வெளியாகியிருக்கிறது.
ஓவியத்திற்கான தேர்வில் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ் வேண்டும் என்று கூறி ஏராளமானோர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஓவியத்திற்கு தமிழ்வழியில் படித்ததாக சான்றிதழ் எதுவும் இல்லை என தேர்வுத்துறை இயக்குனர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார் .
தையல் உடற்கல்வி உள்ளிட்ட படங்களிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மதிப்பெண் குறைவாக வாங்கியவர்கள் தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருப்பது எப்படி என பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்புகின்றனர் .
பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏற்கனவே வெளியிட்ட தேர்வு முடிவுகளை ரத்து செய்து புதிதாக தகுதியானவர்கள் அனைவரையும் உள்ளடக்கி புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.