புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்
பெட்ரோல் விலை உயர்வின் எதிரொலியாக, புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்தியலிங்கம் சட்டப்பேரவைக்கு சைக்கிளிலில் வந்தார்.
தினசரி விலை நிர்ணயக் கொள்கைகள் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் வைத்தியலிங்கம், சைக்கிளில் சட்டமன்றத்திற்கு வந்தார். வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலில் பயணித்து வந்தார்.
பின்னர் பேசிய சபாநாயகர் வைத்திலிங்கம், "பெட்ரோல் டீசல் விலை நாள் தோறும் உயர்வதன் காரணமாக, சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சைக்கிளிலில் வந்தேன், அதிக தூரம் பயணிக்கும் போது மட்டும் அரசு வாகனத்தை பயன்படுத்த போகிறேன்." என்றார். "இதேபோல் நகரப்பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் சிக்கன நடவடிக்கையாக சைக்கிளிலில் செல்ல வேண்டும். மேலும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இறுதி தீர்ப்பு வரும் வரை மூன்று பேரும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக தொடருவார்கள்" எனவும் சபாநாயகர் வைத்தியலிங்கம் கூறினார்.