அலுவலக தோழியை சீரழித்த காமுகர்கள்: டெல்லியில் மீண்டும் பயங்கரம்
டெல்லியின் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவர், உடன் வேலை பார்க்கும் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இது பற்றி காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது:மேற்கு டெல்லியின் துவார்கா பகுதியில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு, அந்நிறுவனத்தில் பணியாற்றும் பிர்ஜூ (வயது 25), வினோத் குமார் (வயது 31) இருவரும் உடன் பணிபுரியும் பெண் ஒருவரை அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கூறி வாகனத்தில் ஏறும்படி அழைத்துள்ளனர். சென்று கொண்டிருந்த வழியில், குளிர்பானம் ஒன்றை அருந்தக்கொடுத்துள்ளனர்.
அதில் மயக்க மருந்து கலந்திருந்தது தெரியாத அப்பெண் அதை பருகியுள்ளார். தொடர்ந்து மயக்கமடைந்த அவரை, அலுவலக தோழர் இருவரும் அடுக்குமாடி ஒன்றுக்கு கொண்டு சென்று பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். பின்னர், அவரை தெற்கு டெல்லியில் வசந்த் குஞ்ச் என்ற இடத்தில் விட்டு விட்டு சென்றுள்ளனர்.
வீட்டுக்குச் சென்ற அப்பெண், நடந்ததை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதில் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் அவரவர் வீடுகளிலிருந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவி வருவது வருந்தத்தக்கது.