மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்! கேரளாஅரசுக்கு பாஜக எச்சரிக்கை
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கேரளா அரசு 24 மணி நேரத்தில் நல்ல முடிவை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று கேரளா பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற வழக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் தீா்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆணும், பெண்ணும் சமம் என்று தீா்ப்பு வழங்கினா்.
இந்த தீா்ப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தொிவித்த வண்ணம் உள்ளனா். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற நவம்பா் 16ம் தேதி முதல் பெண்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சபரிமலையில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கேரளா அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாநில பாஜக சாா்பில் 5 நாட்கள் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பந்தளத்தில் இருந்து இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தது. இந்த பேரணியில் பெண்கள், குழந்தைகள், ஐயப்பன் பக்தா்கள் என் திரளானோா் கலந்து கொண்டனா். இந்நிலையில் மாநில பாஜக தலைவா் ஸ்ரீதரன் பிள்ளை பேசுகையில், கேரளா இடதுசாரி கூட்டணி அரசு சபரிமலை ஐயப்பன் கோவில் சம்பிரதாயத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவோம்.
இந்த அரசுக்கு 24 மணி நேரம் கெடு அளித்துள்ளோம். அதற்குள் பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் கிராமங்கள்தோறும் இந்த போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று எச்சரித்துள்ளாா்.