ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- ஆய்வு குழுவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை, தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அப்பகுதி மக்களை கேட்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழு நியமித்தது.
கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி தூத்துக்குடி வந்த இந்த குழு, 2 நாட்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தது.
பின்னர் ஸ்டெர்லைட் வழக்கில் எதிர்மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்களை நேரில் சந்தித்து ஆவணங்கள், கருத்துக்களை அந்த குழு கேட்டறிந்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், “ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்” என சிறப்புக் குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவிற்கு நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டது. வழக்கு விசாரணை அடுத்த மாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.