அரியலூரில் சோகம்: தனியார் பள்ளி பேருந்து மோதி இரண்டரை வயது குழந்தை பலி
அரியலூர் அருகே, விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயதான குழந்தை மீது தனியார் பள்ளி பேருந்து ஒன்று மோதியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம் செந்தூறை அடுத்து ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள சோழன்குடிக்காடு பகுதியை சேர்ந்தவர் இளவரசன். விவசாயியான இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், நவீன், நிதிஷ் (21/2) என்ற இரண்டு மகன்களும் ஆவர்.
நவீன் செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். தினமும் பள்ளி பேருந்தில் செல்லும் நவீனை வழி அனுப்புவதற்காக கலைச்செல்வி இன்று வழக்கம்போல் வெளியே வந்துள்ளார். அப்போது, அவருடன் நிதிஷ¨ம் உடன் வந்துள்ளான்.
அப்போது, அங்கு வந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்றில் நவீன் ஏறினான். அந்தநேரத்தில், நிதிஷ் பள்ளி பேருந்து பின்னால் நின்று கொண்டிருந்தான். இதனை கவனிக்காத ஓட்டுனர் பேருந்தை பின்னோக்கி இயக்கினார்.
இதில், நிதிஷ் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தாயின் கண் முன்னே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி செய்வதறியாமல் கதறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.