குருவித்துறை பெருமாள் கோயில் சிலைகள் மீட்பு
மதுரை மாவட்டம் குருவித்துறை பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட நான்கு சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது.
குருவித்துறை வைகை கரையோரம் சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் அமைந்துள்ளது. குருபகவான் பரிகார தலமான இந்த கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
கோயில் அர்ச்சகர் ரெங்கநாத பட்டர் காடுபட்டி காவல்துறையிடம்ட புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன், அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடும் பணி நடந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் விளாங்குடி என்ற இடத்தில் சாலையோரம் கேட்பாரற்று நான்கு சிலைகள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. அதே பகுதியை சேர்ந்த கணேசன் உள்பட 3 பேர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
அங்கு விரைந்த விளாங்குடி போலீசார் சிலைகளை மீட்டு, குருவித்துறை சோழவந்தான் கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் இவைதானா என்பதை உறுதிப்படுத்திய பிறகு, அந்த சிலைகள் மதுரை காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இது குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.