தமிழகத்தில் தொடர்ந்து மாயமாகும் பழமைவாய்ந்த சிலைகள்!

வேலூர் மாவட்டத்தில் 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோமநாதர் கோயிலில் 12 யோகி தேவி சிலைகள், 30 கல்தூண்கள் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே திருமலைச்சேரியில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மூன்றாம் கிருஷ்ணன் என்ற மன்னன் சோமநாதர் கோயிலைக் கட்டியுள்ளார். இந்தக் கோயிலில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான இந்தக் கோயிலில் இருந்த 12 யோகிதேவி சிலைகள், பைரவர், துவாரபாலகர்கள் கற்சிலைகள் காணாமல் போயின.

30 பழமையான கல்தூண்கள் கோபுரத்தில் இருந்த நந்தி சிலைகள் போன்றவையும் மாயமாகின. இதுகுறித்து காஞ்சிபுரம் ராயன்குட்டையைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர், கடந்த வெள்ளியன்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் புகார் அளித்தார். அவரது அறிவுறுத்தலின்படி, இந்தப் புகார் மனு வேலூர் மாவட்ட எஸ்பி மற்றும் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திலும் திங்களன்று அளிக்கப்பட்டுள்ளது. மாயமான சிலைகள், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமநாதர் கோயிலில் மாயமான நந்தி சிலைகள் சென்னையில் அண்மையில் ரன்வீர் ஷாவின் வீட்டில் சிக்கிய சிலைகளை ஒத்திருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவற்றை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வருவதோடு சிலை திருட்டு, கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

More News >>