தூத்துக்குடி போராட்டம்: கோமாவில் இருந்த வாலிபர் மரணம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயமடைந்த நிலையில் கோமா நிலைக்கு சென்ற வாலிபர் ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த மே மாதம் 22ம் தேது தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, போராட்டம் நடந்தது. பின்னர் இந்த போராட்டத்தில் அத்துமீறி நுழைந்த சில சமூக விரோதிகளால் போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

இதில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட கீழமுடிமண் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷிப்பிங் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்த ஜஸ்டின் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கோமா நிலைக்கு சென்றார்.

இதையடுத்து, தொடர்ந்து 5 மாத காலமாக பாளையங்கோட்டையிலுள்ள ஹைகிரவுண்ட் மருத்துவமனையில், கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>