கர்நாடகாவில் உல்லாசத்திற்கு அழைத்த வங்கி மேலாளரை அடித்து துவைத்த வீரமங்கை
கர்நாடகா மாநிலத்தில் உல்லாசத்திற்கு அழைத்த வங்கி மேலாளரை, பெண் ஒருவர் வெளுத்தெடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் தாவனகெரே நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுயதொழில் செய்வதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இரண்டு லட்சம் ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் தேவய்யா, கடன் தொகைக்கு ஒப்புதல் கையெழுத்து போட வேண்டுமென்றால் ஒருநாள் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்மணி கடன் தொகையே வேண்டாம் என கூறி வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு திரும்பிய பின்னர் நடந்தவை குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் சகோதரி நேராக வங்கிக்கு சென்று அங்கிருந்த மேலாளர் தேவய்யாவை வங்கியிலிருந்து தரதரவென வெளியே இழுத்து வந்து கீழே கிடந்த பிரம்பை எடுத்து வெளுத்து வாங்கிவிட்டார்.
இதை பெண்ணுடன் வந்த மற்றொரு உறவினர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பெண்ணின் இந்த துணிச்சலான செயலுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் தேவய்யாவின் நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.