ரஜினி கட்சியில் இயக்குநர் மகேந்திரன் சேர்கிறாரா?
அனைவருமே ரஜினியின் கட்சிக்கு தங்களின் பங்களிப்பை தருவார்கள். அதே போல், நானும் எனது பங்களிப்பை தருவேன் என்று இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்து நேற்று உறுதி செயத நடிகர் ரஜினிகாந்த் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பதிலளித்த மகேந்திரன், ''இது குறித்த விரிவான தகவல்களை அவர் இனி கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன். இன்றைய அறிவிப்பு தலைப்பு செய்திகள் போல்தான்'' என்று கூறினார்.
மேலும், ''நான் மட்டுமல்ல, சோ ராமசாமி போன்றவர்கள்கூட, ரஜினியை பெயரை அரசியலுக்கு வரவேண்டும் என்று முன்மொழிந்தனர . ஒரு அரசியல் தலைவராக வர அனைத்து தகுதிகளும் ரஜினிக்கு உண்டு என்று கணித்தவர் சோ. அந்த கணிப்பு இன்று உண்மையாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.
ரஜினியின் கட்சியில் சேர வாய்ப்புண்டா என்று கேள்விக்கு, ''அனைவருமே ரஜினியின் கட்சிக்கு தங்களின் பங்களிப்பை தருவார்கள். அதே போல், நானும் எனது பங்களிப்பை தருவேன்'' என்று தெரிவித்தார்.
கட்சியின் பெயர் குறித்து ரஜினி அறிவிக்காதது குறித்த கேள்விக்கு, ''அரசியலுக்கு வருவேன் என்று இன்று உறுதியாக கூறிவிட்டார் ரஜினி. கட்சியின் பெயர், கொடி போன்றவற்றையம், கட்சியின் கொள்கைகள் பற்றியும் இன்றே கூறுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு காலம் உள்ளது. இனிமேல் அது குறித்து தெரிவிப்பார்'' என்று தெரிவித்துள்ளார்.