அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் சட்டப்பூர்வமாக மீட்போம்: டிடிவி தினகரன்
அம்மா அவர்களின் வழியில் கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் சட்டப்பூர்வமாக மீட்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க. 1972 அக்டோபர் 17 அன்று சுயநல சித்தாந்தத்தை எதிர்த்து சீறி சிலிர்த்தெழுந்த இயக்கம். பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியாரின் பாசறையில் தோன்றிய, அண்ணாவின் கொள்கை காக்க, புரட்சித்தலைவரின் ஆற்றல் மிக்க தலைமையில் அவதரித்த மக்கள் இயக்கம், அடுத்தடுத்த வெற்றிகள் படிக்கட்டுகளாய் அமைந்த போதிலும், அ.தி.மு.க. ஒரு நாள் நாடாளுமென்று, அன்று ஆட்சியிலிருந்த தி.மு.க. ஏற்றுக்கொள்ளவே இல்லை.
மாயை என்றார்கள், நடிகர் என்றார்கள், அடக்கு முறை ஆயிரம் ஏவினார்கள், புழுதிவாரி தூற்றினார்கள், ஆனாலும் மறந்தே போனார்கள், அன்று அமைந்த தி.மு.க. ஆட்சி புரட்சித்தலைவரின் உழைப்பால் மலர்ந்தது என்று, எனினும், மக்கள் சக்தி மகத்தானது என்பதனை ஒவ்வொரு தேர்தல் களத்திலும் புரட்சித்தலைவரின் தலைமை நிரூபித்துக் காட்டியது.
புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பின்னால் அ.தி.மு.க.வும் மறைந்துபோகும் என்று ஆருடம் கணித்தவர்களை திகைப்பில் ஆழ்த்தும் வகையில், இயக்கத்தை ஒன்றாக்கி, இழந்த சின்னத்தை மீட்டு, இழந்த புரட்சித் தலைவரின் ஆட்சியையும் மீண்டும் நிலைநாட்டியவர் நம் அம்மா.
இந்திய நாட்டிற்கே ஆட்சி முறையில் வழி காட்டிய மாநிலமாக தமிழகத்தை திகழச்செய்து, எல்லாத்தரப்பினருக்கும் ஆட்சியின் பலன் சென்று சேரவைத்து தாய்மார்கள், பெரியோர்கள், விவசாயிகள், பாட்டாளிகள், மாணவர்கள், முதியவர்கள் என அனைவருக்குமான அரசாக திகழ்ந்தது அம்மாவின் அரசு.
துரோகத்தின் பிடியிலும், ஆதிக்கத்தின் வசமும், அ.தி.மு.க சிறைபட்டு கிடக்கும் கொடுமையை கண்டுதான் அம்மாவின் 90 சதவீதத்திற்கு மேலான உண்மையான தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தோடு உள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் தங்கள் சுயநலனுக்காக இருக்கும் ஒரு சிலரே.
இந்த நொடி வரை உண்மையான அ.தி.மு.க.வாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமே திகழ்ந்து வருகிறது. இனி வரக்கூடிய காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அ.தி.மு.கவை மீட்டெடுக்கும் காலமாகவே அமைந்திடும்.
ஒரு போராளியாக தன் வாழ்க்கையை அமைத்த, அம்மா அவர்களின் வழியில் கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் இக்கொடியவர்களின் பிடியிலிருந்து சட்டப்பூர்வமாக மீட்போம். அந்த நல்ல நாள் வெகுதொலைவில் இல்லை. நாம் ஒவ்வொருவரும் கழகம் மீட்கும் ஜனநாயக போராளிகளாக களத்தில் நின்றிடுவோம். துரோகத்தை வீழ்த்திடுவோம், இதில் வென்றிடுவோம்.இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.