குட்கா வழக்கு- அதிகாரி ஜாமினுக்கு சிபிஐ எதிர்ப்பு

குட்கா முறைகேடு வழக்கில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதற்கான ஆதாராம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி சோதனை நடந்தது.

பிறகு, குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் மற்றும் மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் உள்ளிட்டோர் 5 பேரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் முருகன், 2013 முதல் 2015 ஆண்டு வரை குட்கா தயாரிப்பாளர்களிடம் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதற்கு ஆதாரம் இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியனின் ஜாமின் மனுவுடன் சேர்த்து விசாரிப்பதாக கூறி, செந்தில் முருகனின் ஜாமின் மனுவை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

More News >>