தூத்துக்குடி துறைமுகத்திற்கு முதன்முறையாக வந்த பெரிய கப்பல்

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளது. இத்துறைமுகத்திற்கு டிராப்ட் (draft) என்னும் கடலுக்குள் மூழ்கியிருக்கும் உடல்பகுதியில் அதிக நீளம் கொண்ட கப்பல் வந்துள்ளது.

கடந்த திங்களன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தின் வடக்கு முதலாவது சரக்கு முனையத்திற்கு வந்துள்ள எம்.வி. ஷேங்க் ஜன் (MV Zheng Jun) என்னும் பெயர் கொண்ட கப்பல் பனாமா நாட்டைச் சேர்ந்ததாகும்.

இதன் 'டிராப்ட்' பகுதியின் நீளம் 14 மீட்டர் ஆகும். தூத்துக்குடி துறைமுக வரலாற்றில் இவ்வளவு நீளம் கொண்ட கப்பல் வருவது இதுவே முதன்முறையாகும்.

மொத்தத்தில் 229 மீட்டர் நீளம், 32.26 மீட்டர் அகலம் கொண்ட 'ஷேங்க் ஜன்' கப்பல் இந்தோனேஷியாவின் சமரிண்டா துறைமுகத்திலிருந்து நெய்வேலி அனல் மின் நிலையத்திற்கென 74,962 டன் நிலக்கரியை சுமந்து வந்துள்ளது.

இதற்கு முன் 13.20 மீட்டர் 'டிராப்ட்' கொண்ட 'எம்.வி. டயோனிசஸ்' என்ற கப்பலே இங்கு வந்த பெரிய கப்பலாக இருந்தது. அக்கப்பல் உர நிறுவனம் ஒன்றிற்காக 65,500 டன் ராக் பாஸ்பேட் கொண்டு வந்திருந்தது.

எம்.வி.ஷேங்க் ஜன் கப்பலை கேப்டன் ஜே. கிங்ஸ்டன் நீல் துரை, பைலட் கேப்டன் என். வெங்கடேஷ் ஆகியோர் கேப்டன் பாபதோஷ் சந்த் வழிகாட்டலின்படி துறைமுகத்திற்குள் கொண்டு வந்தனர்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் ரிங்கேஷ் ராய், இக்கப்பலை துறைமுகத்திற்குள் கொண்டு வந்த குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, "இம்மண்டலத்தில் நடந்து வரும் திட்ட மேம்பாட்டில் இவ்வளவு பெரிய கப்பல் துறைமுகத்திற்குள் வந்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

நிலக்கரி, சுண்ணாம்பு கல், ராக் பாஸ்பேட் மற்றும் சரக்குகளை பெருமளவில் கையாள்வதன் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்த உள்ள வாய்ப்புக்கு இது எடுத்துக்காட்டாகும்," என்று கூறியுள்ளார்.

More News >>