தமிழகத்தில் கேன் வாட்டர் உற்பத்தி நிறுத்தம்
நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலைக்கு தடுக்க வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு நீர் வழங்குவதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மருத்துவமனை நிர்வாகம், பெரிய வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் தண்ணீரின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகின. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்க மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நுகர்வோர்கள் தங்களுக்கு விருப்பமான தண்ணீர் லாரிகள் மற்றும் அவர்களது அங்கீகாரம் பெற்ற லாரிகள் மூலம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை சென்னை குடிநீர் வாரியம் நீரேற்று நிலையத்திற்கு சென்று தண்ணீர் பிடித்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனிடையே டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக தண்ணீர் கேன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பெறும் வரை போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தத்தால் சென்னை மாநகர மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.