ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால், இணையதள வர்த்தக நிறுவனங்கள் இனிப்பு வகைகள் முதல் பட்டாசு விற்பனையும் செய்ய தொடங்கிவிட்டன. மேலும், பட்டாசு வாங்குவதற்காகவே பல ஆன்லைன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் மழை பொழிந்து வருகின்றனர்.
இதனால், பொது மக்கள் நேரடியாக கடைக்கு சென்று பட்டாசு வாங்குவதை தவிர்த்து ஆன்லைனிலையே பட்டாசையும் வாங்கி வருகின்றனர். இதன் எதிரொலியால், சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து கடைகள் போட்டு விற்பனை செய்யும் உள்ளூர் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே, இந்திய பட்டாசு விற்பனை பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளும் புழங்குவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, பட்டாசு வியாபாரம் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய எந்த ஒரு விதியையும் கடைப்பிடிக்காமல் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஷேக் தாவூத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதற்கு தடை விதித்து, வழக்கு மறுவிசாரணையை வரும் நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.