மணல் அள்ளுவதற்கு லஞ்சம் - விருத்தாச்சலம் வட்டாட்சியர் கைது
சட்டவிரோதமாக மணல் அள்ளியவரிடமிருந்து லஞ்சம் பெற முயற்சித்த விருத்தாச்சலம் வட்டாட்சியரும் அவரது ஓட்டுநரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றி கூறப்படுவதாவது:
சாத்துக்கூடல் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மணல் கொள்ளை நடப்பதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து விருத்தாச்சலம் வட்டாட்சியரான ஸ்ரீதர், செல்வத்தின் நிலத்தை ஆய்வு செய்ய வந்துள்ளார். ஆய்வின்போது 40 அடி ஆழத்திற்கு தோண்டி மணல் அள்ளப்பட்டிருப்பதை அவர் கண்டு பிடித்துள்ளார்.
இவ்வளவு மணல் அள்ளியதற்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும் என்று கூறிய வட்டாட்சியர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியரிடம் விஷயத்தை கொண்டுசெல்லாமல் இருப்பதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
உடனடியாக அறுபதாயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட அவர், மீதம் இருக்கும் தொகையை வாங்குவதற்கு திங்கள்கிழமை வருவதாக கூறி சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து செல்வம், கடலூரிலுள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அவர்கள் வட்டாட்சியரை பிடிப்பதற்கு திட்டம் வகுத்துள்ளனர். திங்களன்று லஞ்ச தொகையை வாங்குவதற்கு வட்டாட்சியர் ஸ்ரீதர் தமது ஓட்டுநர் கந்தசாமியுடன் வந்துள்ளார்.
தொகையை வாங்குவதற்கு கந்தசாமி முயற்சித்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை பிடித்துள்ளனர். வட்டாட்சியருக்காக லஞ்சம் வாங்க முயன்றதை அறிந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ஸ்ரீதரையும் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை ஆரம்பமாகியுள்ளது.